
தியாகம் செய்யாமல் வெளிநாட்டு கடன்களை பெற முடியாது - கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் கடனாளிகளுடன் இணக்கப்பாடு - விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும், இதில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்புக் கடனாகவும், 11.7 பில்லியன் அமெரிக்க டொலர் பலதரப்புக் கடனாகவும், 14.7 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகக் கடனாகவும், 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், ஆனால் அவற்றில் சில உண்மைகள் அற்றவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், பெரிய கடன் குறைப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக கடன் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய வருமானம் பெறும் நாடுகளுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு கட்டமைப்பை கடன் மறுசீரமைப்பிற்காக பயன்படுத்திய முதல் நடுத்தர வருமான நாடுகளில் இலங்கையும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கினார்.
இன்றும் நாளையும் நடைபெறவிருந்த ஒப்பந்தங்கள் மீதான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 2024 ஜூலை 2ஆம் திகதி காலை 9.30 க்கு விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளுமாறு எழுத்து மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
00