
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு
நாடாளுமன்றம் நாளை 02 ஆம் திகதியும் நாளைமறுதினம் 03 ஆம் திகதியும் கூடுமென நாடாமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காகவே, நாளை 02 மற்றும் நாளைமறுதினம் 03 ஆம் திகதிகளில் விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இது தொடர்பில் கூறுகையில் –
இவ்விசேட நாடாளுமன்ற அமர்வை நாளை 02 செவ்வாய் மற்றும் புதன்கிழமை 03 ஆம் திகதிகளில் கூட்டுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் முழு நாட்டு மக்களினதும் கவனமும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வில் குவிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜூலை 02 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலான விவாதமும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னர், அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுமெனவும், தேவைப்பட்டால் நாளைமறுதினம் (03) வாக்கெடுப்பை நடத்த முடியுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே புதன்கிழமை அமர்வில்,ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவும் (OCC) கடந்த 2024.06.26 இல்,கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கம் மற்றும் சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (EXIM Bank) ஆகியவற்றுக்கிடையில் 2024.06.26 இல், கைச்சாத்திடப்பட்ட இறுதி உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப் படுது்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக இத்தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000