பிரான்ஸில் கலவரம் வெடித்தது
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்.என்.கட்சியின் மரைன் லெ பென் (Marine Le Pen)
தெரிவித்துள்ள அதேநேரம், பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான் அனைத்து பிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்.என். கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதற்கு எதிராக தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரிசில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளது.இந்த வன்முறைகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டுள்ள சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரீசின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.