10 பேருக்கு 400 ஏக்கர் காணியை கொடுக்க நினைக்கின்றனர் சிலர் - கமநல சேவை நிலையத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வலியுறுத்து
அருவி தோட்டத்தில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட மத்திய வகுப்பு வயல்காணிகளை ஒரு சிலர் மட்டும் பயன்படுத்துவதை மீள் பரிசீலனை செய்து, காணியற்ற மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் குறித்த காணிகளை தற்காலிகமாக வழங்க வேண்டும் என்று அபிவிருத்திக் குழு கூட்ட தீர்மானம் உள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் குலசிங்கம் திலீபன் ஆனால், செட்டிகுளம் பிரதேச செயலகம் அதனை நடைமுறைப் படுத்தவில்லை. என குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர்களான குலசிங்கம் திலீபன் மற்றும் ஆளுநர் திருமதி சாள்ஸ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மீண்டும் குறித்த அருவித்தோட்டம் வயல்காணி விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சுட்டிக் காட்டியிருந்தார்
குறிப்பாக ஆவணம் இருக்கக் கூடிய 75 ஏக்கர் காணியினை தவிர்த்து ஏனைய காணிகளை, வயல் காணியற்ற மக்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும், இக்காணிக்கு அருகில் தற்பொழுது பற்றைக் காடாக இருக்கக் கூடிய 300 ஏக்கர் காணியினையும் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க வேண்டுமென்றும் எமது முன்மொழிவுக்கமைய முடிவு எடுக்கப்பட்டதோடு கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டுமென்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது
அத்துடன் அபிவிருத்திக் குழு தலைவர், அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றும் குறித்த விடயத்திற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்டது
மேலும்,
செட்டிகுளம் கமநல சேவை நிலையமும், அருவித் தோட்டம் வயல் காணியில் 250 ஏக்கர் காணியினை செய்து வந்ததென்றும், அதற்கான சரியான கணக்காய்வு செய்யப்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது,
கமநல சேவை உதவி ஆணையாளரும் அதனை ஏற்றுக் கொண்டு, மாவட்ட செயலகமே ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விரைவில் ஆய்வு செய்வதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
இதனிடையே செட்டிகுளம் கமநல சேவை நிலையம் 80 ஏக்கர் காணியினை மேலதிகமாகவும் செய்கை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததும் இதன்போது சுட்ட்டப்பட்டது
குறிப்பாக வருட குத்தகை ஒரு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாவாக எழுதப்பட்டு, இருபது ஆயிரம் ரூபாய் வரை வேறு நபர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து லாபம் பெற்றதாக தகவல் கிடைக்கப் பெற்றது. ஆக மொத்தம் கோடிக்கணக்கான பணம் கிடைத்துள்ளது என்பது உண்மை. ஆனால் பயன் பெற்றவர்கள் யார்?...இதைவிட 80 ஏக்கரில் கிடைத்த பணம்? தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000