இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியளிப்பு - இலங்கைக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு
இருதரப்புக் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேசப் பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்த நிலைமை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை இருதரப்புக் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து இருதரப்புக் கடன் முகாமைத்துவத்திற்கான உத்தியோகபூர்வக் கடன் வழங்குநர் குழுவை உருவாக்கி அதற்காகச் செயற்பட்டன. அதேநேரம் சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலைபேறான நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும்.
சர்வதேசப் பிணைமுறிகள் வைத்திருப்பவர்களுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்த வெற்றி உதவும்.
தற்போது அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000