சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு - அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
காலி தம்ம பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். நேற்று முன்தினம் (27) நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று பொதுமக்களுக்கான அரச சேவை சிறப்பாக இல்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இது தவறு. ஒரு சில அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்கினாலும், மொத்த அரசு ஊழியர்கள் கௌரவமான சேவை செய்து வருகின்றனர்.
இலஞ்சம் மற்றும் மோசடியை தடுக்க வலுவான புதிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.
மேலும் கடந்த சில மாதங்களில் சட்ட கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் 75 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டை கட்டியெழுப்ப வலுவான சட்ட கட்டமைப்பு தேவை. கடந்த காலத்தில் நாங்கள் அதனை செய்துள்ளோம்.
உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் சட்டத்தின் ஆட்சி வலுப்படுத்தப்பட்டமையே முதன்மைக் காரணமாகும். வளர்ந்த நாடாக மாற வலுவான சட்ட கட்டமைப்பு அவசியம். ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்தால், மக்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதில் ஈடுபடுவார்கள். நீதிக்கும் தர்மத்திற்கும் வித்தியாசம் உண்டு. நீதி என்பது நாம் நிரூபிக்க வேண்டிய ஒன்று. தர்மம் என்றால் மனசாட்சிப்படி செயல்படுவது. இன்று இந்த நாட்டின் கல்வி முறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதற்காக புதிய கல்வி சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நம் நாட்டில் உள்ள பிரபல பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஒரு தகவல் உண்டு. அதன் மூலம் இந்நாட்டின் கல்வியின் நிலை தெளிவாகின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000