வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் அனுமதி
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நேற்று (12.05.2021) இரவு 11 மணி தொடக்கம் இயங்குமென வன்னி இராணுவத் தளபதி தெரிவித்தார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக்கட்ட வேலைகளை நேற்றையதினம் பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன் 200 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதுடன் நேற்று (12.05.2021) இரவு 11.00 மணி முதல் நோயாளர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நோயாளர் தற்போது இராணுவ பாதுகாப்புடன் பேருந்து மூலம் வவுனியா நோக்கி வருகை தந்து கொண்டிருப்பதுடன் இரவு 11.00 மணியளவில் வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தினை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.