
இந்தியன் ப்ரீமியர் லீக் - மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு முன்வரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒரு வார காலத்துக்குப் பின்னர் இந்தியாவினால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முடியாவிட்டால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் குறித்த போட்டிகளை தங்களால் நடத்த முடியும் என ரிச்சட் கோல்ட் பரிந்துரை முன்வைத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தும் சாத்தியம் நிலவுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000