இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் உள்ள ஆளணியை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது - முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உள்ள ஆளணியினரை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது அத்துடன் முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடியும் என்ற போதிலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
உலக அரங்கில் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இவ்வாறு முன்வைக்கும் கருத்தின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டமைப்பில் சிக்கல் உள்ளதென்பதும், அது எத்தகைய பாரதூரமானது என்பதும் புலப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விடுத்து கட்சி பேதமின்றி கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இலங்கையின் கிரிக்கெட் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமது தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையும் இதனையே வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000