நினைவேந்தல் குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு
நினைவேந்தல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுப் போர் காரணமாக இறந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட அனைத்து நபர்களையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக ஒரு நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பில் குறித்த குழு ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மக்களிடம் கருத்துக்களை பெற்றுக்கொண்டதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியது.
பங்குபற்றிய மக்களுக்கு தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறித்த குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளை பரிசீலித்த பின்னர் குறித்த நிபுணர் குழு பல பரிந்துரைகளை செய்துள்ளது.
அவற்றில் மோதல் காலத்தில் உருவாக்கப்பட்ட கலை மற்றும் கலாசார வெளிப்பாடுகளை பாதுகாக்க ஒரு மைய இடத்தில் குறியீட்டுக் கட்டிடமொன்றைக் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என அந்த குழு தெரிவித்துள்ளது.
000