ஏப்ரல் 21 தாக்குதல் - அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழு
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.ஜே. டி. அல்விஸ் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே பெறப்பட்ட தகவல் அல்லது உளவுத்தகவல் தொடர்பில் அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் பிற அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.
அத்துடன், இந்திய புலனாய்வு அமைப்புகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வவுணதீவில் நடந்த கொலைகளுக்கு புலிகள் அமைப்பினரே காரணம் என இராணுவ புலனாய்வு பணிப்பாளர்கள் குழு முன்னதாக வெளிப்படுத்திய தகவல்கள் குறித்தும் இந்த குழு விசாரிக்க உள்ளது.
இந்த குழுவின் விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000