தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 7ம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன்னை மாற்றி, இறையன்பு நியமிக்கப்பட்டார். இதேபோல, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்டோரும் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல் பயிற்சிக் கல்லூரி சிறப்பு டிஜிபியாக இருந்த ஷகீல் அக்தர், சிபிசிஐடி டிஜிபியாகவும், சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி, காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிரடிப் படையின் (ஈரோடு) ஏடிஜிபியாக இருந்த எம்.ரவி, (நிர்வாகத்துறை) சிறப்பு டிஜிபியாகவும், உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமிக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப சேவைப் பிரிவின் டிஐஜியாக இருந்த ஆசையம்மாள், காலியாக இருந்த உளவுத்துறை டிஐஜியாகவும், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த அரவிந்தன், குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக இருந்த சரவணன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பியாகவும், மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி – 1 எஸ்.பி-யாகவும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி – 2 எஸ்.பி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.