நாளை முதல் 2 வாரம் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாளை (10-ந் தேதி) முதல் 24-ந் தேதி வரை 2 வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு நேற்று காலையில் பிறப்பித்தது. அப்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்கு முன்பு வரை அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மட்டும் திறந்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் உத்தரவை அடுத்து நேற்று காலை 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அவசரம் அவசரமாக திறக்கப்பட்டன.
குறிப்பாக பல மாடிகளை கொண்ட ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் முழுமையாக செயல்படத் தொடங்கின.
முதலில் காலை 11 மணி வரையில் மட்டுமே திறப்பதற்கு முடிவு செய்திருந்த கடை உரிமையாளர்கள் முழு நாளும் கடைகளை திறந்து வைக்க ஊழியர்களை அறிவுறுத்தினார்கள்.
அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு இருப்பதால் மொத்தமாக ஒவ்வொரு வாரமும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குபவர்கள் நேற்று பெரிய மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக அளவில் கூடினார்கள்.
வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை அதிக அளவில் வாங்கினார்கள். இதனால் சூப்பர்மார்க்கெட்டுகள் போன்ற பெரிய கடைகளில் மளிகை பொருட்கள் அதிக அளவில் விற்று தீர்ந்தன. இதனால் நேற்று மாலையில் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்று ஞாயிற்றுக் கிழமை அனைத்து கடைகளையும் இரவ 9 மணிவரையில் அனைத்து கடைகளையும் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று அனைத்து வணிக பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
முழு ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அனைத்து இறைச்சிக் கடைகளிலும், மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய ஜவுளிக்கடைகள் ஆகியவற்றிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
தங்களது வீடுகளில் அடுத்த 2 வாரங்களில் நடைபெற உள்ள பிறந்தநாள் மற்றும் திருமண விழாக்களுக்கு தேவையான பொருட்களை பொது மக்கள் நேற்றும் இன்றும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதை காண முடிந்தது.
இதனால் கடைகளில் பரிசுப்பொருட்கள், துணிவகைகள் ஆகியவையும் அதிக அளவில் விற்பனையானது.
தமிழக அரசு அறிவித்த தளர்வு காரணமாக சில வாரங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது. சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் வார சந்தைகள், மார்க்கெட்டுகளிலும் மக்கள் அதிகளவில் திரண்டனர்.
இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் எப்போதும் போல மக்கள் அதிகளவில் வெளியில் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
சலூன் கடைகளும் நாளை முதல் 2 வாரங்களுக்கு மூடப்ப ட்டிருக்கும் என்பதால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. பல இடங்களில் முடிவு வெட்டுவதற்காக நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.