தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல் அமைச்சர் ஸ்டாலின்
தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு என்றும் உங்களில் ஒருவனான நான், தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு எழுதுகிற முதல் மடல் இது.
தமிழக அரசின் முதல்-அமைச்சர் எனும் மிகப் பெரும் பொறுப்புக்கு நான், உங்கள் அளவற்ற அன்பினால், அதில் விளைந்த ஆதரவினால், என் மீது நீங்கள் என்றும் வைத்திருக்கிற நிலையான நம்பிக்கையினால் பதவி ஏற்றிருக்கிறேன்; பதவி ஏற்றிருக்கிறேன் என்பதைவிட, பொறுப்பேற்றிருக்கிறேன், பணியேற்றிருக்கிறேன் என்பதுதான் பொருத்தமான உண்மை.
ஆருயிர்க் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால், கூட்டணிக் கட்சித் தோழர்களின் ஆர்வம் மிகு துணையினால், அவற்றால் திரண்ட மகத்தான வெற்றியால், அதனை மனமுவந்து வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளர்களால், அன்னைத் தமிழகத்திற்கு அருந்தொண்டாற்றுகின்ற முதல் வரிசைப் பணியாளனாக, முழு நேர ஊழியனாக என்னைக் கருதிக்கொள்கிறேனே தவிர, முதல்-அமைச்சராகக் கருதவில்லை.
நெஞ்சை அள்ளும் காவியமாம் சிலப்பதிகாரத்தில் 'மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்' என்று சேரன் செங்குட்டுவன் சொல்வதை இளங்கோ அடிகள் குறிப்பிடுவதைப் போல, ஆட்சிப் பொறுப்பு என்பது மலர் மஞ்சமல்ல, அது முள்ளாலான படுக்கை.
இதை மனத்தில் வைத்து தமிழகத்தில் மீண்டும் முன்னேற்றப் பணிகளை முயல் வேகத்தில் முடுக்கிவிடும் தலையாயப் பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன் (நாம் ஒன்றிணைந்து தலையில் ஏற்றிருக்கிறோம்) என்பதை உங்கள் அனைவருக்கும் உணர்த்திட விரும்புகிறேன்.
எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். எழுச்சி பெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
அதைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒத்துழைப்போடும், அலுவலர்களின் ஒருங்கிணைப்போடும் நிறைவேற்றுவோம் என்ற உயர்ந்த நம்பிக்கையுடன் உங்களோடு இணைந்து பணியாற்றவிருக்கிறேன்.
தமிழக மக்கள் தந்துள்ள வெற்றியை தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கி, அவர் கற்றுத் தந்த அரசியல், நிர்வாக அனுபவத்தின் துணைகொண்டு, சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு, தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன்" இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.