கனடாவின் உள்விவகாரங்களில் தலையிட்டதாக சீனா மீது குற்றச்சாட்டு
இந்தியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, பின்னர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது. தற்போது சீனா மீதும் கனடா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
கனடாவின் உளவுத்துறை ஏஜன்சி, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றில், கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இல்லை என தெரியவந்துள்ளது.
ஆனால், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்திருக்கலாம் என தற்போது கனேடிய தேசிய உளவுத்துறை ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இப்படி தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், ட்ரூடோ அரசு நிர்வாகம் அதுகுறித்து போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.