அரவிந்த் கெஜ்ரிவால் கைது
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் தமது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்; அவர் தொடர்ந்து முதல்வராகவே நீடிப்பார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. டெல்லி முழுவதும் மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என புகார் கூறியவர் டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா. அத்துடன் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் அவர் பரிந்துரைத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டியது. பின்னர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில்தான் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பாக திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனையடுத்து டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பதற்றமும் நிலவுகிறது. டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்; சிறைக்குப் போனாலும் அங்கிருந்தும் முதல்வராகவே பணியை தொடருவார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்குப் போனால் புதிய முதல்வர் யார் என்பது தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.