பைடனின் மகள் லட்சக்கணக்கில் வருமானவரி கட்டாத அலட்சியம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகள் ஆஷ்லி பைடன் சமூக ஆர்வலராகவும், ஆடை வடிவமைப்பு கலைஞராகவும் உள்ளார். பல சமூக நல தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்.
டெலாவேர் மாநில நீதி மையத்தில் கிரிமினல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து ஆஷ்லி பைடன் அமெரிக்க அரசுக்கு வருமான வரி பாக்கியாக ரூ.4 லட்சத்திற்கு ($5000) மேல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த (01.12.2023) பிலடெல்பியா கவுன்டி பகுதியில் உள்ள பென்சில்வேனியா மாநில வருவாய் துறை, ஆஷ்லிக்கு இது குறித்து தகவல் அனுப்பியது. ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக ஜோ பைடன் இருந்த 2015 ஜனவரி 1-ல் தொடங்கி, பைடன் அதிபராக பதவி ஏற்கும் சில தினங்களுக்கு முன்பு 2021 ஜனவரி 1 வரையுள்ள காலகட்டம் இதில் கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆஷ்லி பைடன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
கடந்த (07.12.2023) ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீதும் வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணக்காரர்களும் உயர்ந்த இடங்களில் தொடர்பு வைத்துள்ளவர்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய சரியான பங்கை செலுத்துவதில்லை என ஜோ பைடன் பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது இரு குழந்தைகளும் வருமான வரி செலுத்தவில்லை. மிக அலட்சியமாக அமெரிக்காவின் முதல் குடும்பமான பைடன் குடும்பம் இருந்துள்ளது என பைடன் எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.