நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் காற்று சுழற்சி உருவெடுக்கும் - வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இன்று முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடல் பிராந்தியத்திற்கு செல்லும்.அதேவேளை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையை நெருங்கி, அது எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக் கடல் பிராந்தியத்தினுள் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் காரணமாகவும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது, எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தில் தெற்கு சுமத்திரா தீவை ஒட்டி மேலும் ஒரு காற்று சுழற்சி வங்க கடல் பிராந்தியத்தில் உருவாகும்.அது படிப்படியாக வலுவடைந்து எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் இலங்கையை நெருங்கி, தமிழ்நாட்டை நோக்கி செல்லும்.எனவே மேற்கூறப்பட்ட குறித்த காலப்பகுதிகளில் இலங்கையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது,இந்த நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.