நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யப்பட உள்ள நகரங்கள்
குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (5) முற்பகல் இடம்பெற்றது.
இந்நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் திட்டத்தை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நவீன சந்தை கட்டிடத்தொகுதி, அனைத்து வசதிகளையும் கொண்ட மொத்த விற்பனை நிலையம் மற்றும் வாராந்த சந்தை, வாகன நிறுத்துமிடம், நகர் பூங்கா, பேருந்து நிறுத்தம், பல்நோக்கு கட்டிடம் மற்றும் நடுத்தர வர்க்க வீடமைப்பு தொகுதி உள்ளடங்களாக பெலிஅத்த நகர் அபிவிருத்தி செய்யப்படும் விதம் குறித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளினால் இதன்போது தெளிவு படுத்தப்பட்டது.
இரட்டை வழிச் சாலை அமைப்பு, வெளியிலும் உள்ளேயும் சுற்றுவட்ட பாதை, நான்கு பாதைகள் கொண்ட சாலை அமைப்பு என்பவற்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மத்தல விமான நிலையத்தை மையமாகக் கொண்டு வர்த்தகம், தொழில், குடியிருப்பு வசதிகள், சுற்றுலா, சுகாதார வசதிகள் மற்றும் விவசாய மேம்பாட்டு வலயங்களை நிறுவுதல் மற்றும் மத்தல – லுணுகம்வெஹெர பகுதியில் செயற்படுத்தப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.
குருநாகல் நகரை நவீன நகரமாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கேட்டறிந்தார். அதற்கமைய குருநாகல் நகரை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படும்.