ரஷ்ய படையினரின் தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றிய 3 இலங்கையர்கள் பலி
உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த கூலிப்படை உறுப்பினரான கெப்டன் ரென்டீஸ் எனப்படும் அன்ரூ ரனிஸ் ஹேவகே தமது தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவ உறுப்பினர்களின் Telegram கணக்கில் இன்று முற்பகல் தகவல் பகிரப்பட்டிருந்தது.
உக்ரைனுக்காக போரிட்ட மேலும் இரண்டு இலங்கை கூலிப்படை உறுப்பினர்களும் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிரிழந்த உக்ரைன் சிப்பாய்களின் சடலங்களை வௌியில் எடுத்துச்செல்ல இவர்கள் மூவரும் முயற்சித்தபோது, தாம் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
உக்ரைனில் உள்ள பக்முத் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கெப்டன் டென்டீஸ் என்ற பெயரில் உக்ரைனுக்குள் பிரபலமடைந்திருந்த அன்ரூ ரனிஸ் ஹேவகே இலங்கை காலாற்படையின் அதிகாரியாக செயற்பட்டுள்ளதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.
இவர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி லெப்டினன்டாக இராணுவ சேவையில் இருந்து விலகியுள்ளதுடன், அன்றைய நாளில் அவர் உத்தியோகபூர்வ பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழிலுக்கு சென்ற அவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைனின் சர்வதேச இராணுவ லீக் எனும் பிரிவில் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.
ரஷ்யாவுடன் நடைபெறுகின்ற யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy வௌிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அவர்கள் அதற்காக சர்வதேச இராணுவ லீக்கை ஸ்தாபித்தனர். உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தில் முன்னரங்க பாதுகாப்பு வலய கட்டளை அதிகாரியாக ரனீஸ் சேவையாற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ரனீஸ் ஹேவகே உக்ரைனில் வௌிப்படுத்திய திறமைகள் காரணமாக உக்ரைன் ஜனாதிபதி அவருக்கு இராணுவ பதவி நிலை அதிகாரியாக பதவி உயர்வு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த, உக்ரைன் இராணுவத்தில் இணைந்து செயற்பட்டிருந்த ஏனைய இரண்டு இலங்கையர்கள் தொடர்பாகவும் இன்று (06) மாலை வரை தகவல்கள் வௌியாகவில்லை.