தொழில் முயற்சியாளர்களுக்கான மூலதனம் 2% சலுகை வட்டியில்பெற்றுக் கொடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர
தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்.அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.