மாநாட்டில் ஜனாதிபதி முன்வைத்த யோசனை
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும். அதற்காக தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவதற்கான தயார் நிலைமையை இவ்வருடத்திற்கான COP28 மாநாட்டில் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிரி கதவை அண்மித்து விட்டதால் ஒருபோதும் மேற்படி தீர்மானத்தை காலம் தாழ்த்த முடியாதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 உயர்மட்ட மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (01) டுபாய் எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கபாட்டுக்கு அமைவாக, 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்கவிருப்பதாகவும், அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
22 ஆவது நூற்றாண்டில் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ள நிலையில், மீள்புதுப்பிக்கதக்க வலுசக்திக்கு, சுற்றால் பாதிப்பு கட்டுப்பாடு மற்றும் இயற்கை தீர்வுகளுக்கான பெருமளவான முதலீடுகள் அவசியப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இலங்கை உட்பட ஏனைய பங்குதாரர்கள் வெப்ப வலய தொடர்பான அறிக்கையிடலுக்காக நிபுணத்துவ சபையொன்றை கூட்டுவதற்கு எதிர்பாப்பதாகவும், அதனூடாக வெப்ப வலயத்திற்கு மாத்திரமின்றி முழு துறைசார் திட்டமிடலொன்றை பகிர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.