புதிய சிந்தனையுடன் செயல்பட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் வருடங்களில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 7.5 மில்லியனாக அதிகரிப்பதற்கு சுற்றுலாத் துறையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (27) நடைபெற்ற இலங்கை ஹோட்டல் சங்கத்தின் 58 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஹோட்டல் துறைக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஸ்ரீலால் மித்தபால மற்றும் ஹிரான் குரே ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.