பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
தேசிய பாதுகாப்பை கையாள்வதே தனது பட்டியலில் முதன்மையானது என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (29) இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "நானும் சுமார் 25 வருடங்களாக பொலிஸில் பல்வேறு பதவிகளை வகித்த ஒருவர். எனவே எங்களுக்கு அனுபவம் உள்ளது. இலங்கை மக்களின் நலனுக்காக இலங்கை பொலிஸ் சேவையை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்."
"எனது முன்னுரிமைப் பட்டியலில் தேசிய பாதுகாப்பு தான் முதன்மையானது."
"இரண்டாவது முன்னுரிமை இந்த நாட்டில் போதைப்பொருள் நிலைமையை இல்லாதொழிக்க வேண்டும். இன்று பாடசாலை மாணவர்களுக்கும் கிராமங்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. போதைப்பொருள் எங்கும் உள்ளது. இது சம்பந்தமாக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. அதை செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்."
"ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் பார்க்கிறேன். மிரட்டி பணம் பறித்தல் போன்ற விஷயங்கள். அவை எனது முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. என்னுடைய சேவையைப் பெற்றவர்களுக்கு நான் எப்படிச் செயல்பட்டேன் என்பது தெரியும். என்னுடன் பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் தெரியும். இப்போது அதை அவர்கள் என் செயல்களில் பார்க்க முடியும் என்று கூறினார்.