பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் மைத்திரி எழுப்பிய கேள்வி
கைப்பற்றப்படும் பெருமளவிலான போதைப்பொருட்களை என்ன செய்கின்றீர்கள். நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏன் அழிப்பதில்லை? என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி எழுப்பினார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் மாதிரிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வைத்துக் கொண்டு ஏனையவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வனாத்தவில்லு பகுதியில் போதைப்பொருட்களை அழிப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனது ஆட்சி காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் நீதிபதிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.கடந்த காலங்களில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஆனால் அவை அழிக்கப்படவில்லை.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை என்ன செய்கின்றீர்கள், ஏன் அழிப்பதில்லை என்பதை வெளிப்படுத்துங்கள் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை வனாத்தவில்லு பகுதியில் வைத்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு தொகை போதைப்பொருட்களை மாதிரியாக வைத்துக் கொண்டு ஏனையவற்றை நீதிமன்ற அனுமதியுடன் அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.