டிஜிட்டல் பொருளாதார மாற்றம் - ஒக்டோபர் 11 முதல் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார கொள்கையினால் சர்வதேச போட்டித்தன்மைிக்க பொருளாதாரத்துடன் போட்டியிடும் வகையில் இலங்கையை தயார்படுத்த முடியும் என்பதால், அதனூடாக அடுத்த தசாப்பத்தில் இலங்கையின் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் தெரிவித்தார்.
அதற்காக டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் செயலமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.