முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் - சுயாதீன விசாரணை வேண்டும்
முல்லைத்தீவு நீதவானாக கடமையாற்றிய ரி.சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பில் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்த பூரண விசாரணையின் தேவை எழுந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகுவது குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்த விடயங்கள் மற்றும் அங்கு நிலவும் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளுடன் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டியது அவசியம் என்று அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையே முக்கிய எதிர்பார்ப்பு என்றும், விசாரணை முடிவுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலதாமதமின்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.