இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி
வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால், ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மாண்ட்ரியலில் செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவும் அதன் நட்பு நாடுகளும் உலக அரங்கில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஈடுபடுவது மிகவும் முக்கியமானது என்று தான் கருதுவதாக கூறினார்.
“இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடு. மேலும், கடந்த ஆண்டு இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
“அதே நேரத்தில், வெளிப்படையாக, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடாக, இந்த விஷயத்தின் (ஹர்தீப் சிங் நிஜார் கொலை) முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தியதாக தி நேஷனல் போஸ்ட் தெரிவித்துள்ளது.