ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.
அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.
பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது நம் வாழ்வில் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.
நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிய மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்!