ஹிட்லருக்காக போரிட்டவரால் கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி
யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார்,
இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க 98 வயதான யாரோஸ்லாவ் ஹன்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அவைத் தலைவர் அந்தோனி ரோட்டா, யாரோஸ்லாவ் ஹன்காவை "ஹீரோ" என்று வர்ணித்ததை அடுத்து, அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
யுக்ரேனியரான யாரோஸ்லாவ் ஹன்கா இரண்டாம் உலகப் போருக்குப் பின் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து தற்போது ஒன்டாரியோவில் வசித்து வருகிறார்.
ஹன்காவுக்கு நாஜி படைகளுடன் உறவு இருந்தது பற்றி தனக்குத் தெரியாது என்றும், அவரை அந்நிகழ்வில் பங்கேற்க அழைத்ததில் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் அவைத் தலைவர் ரோட்டா கூறியுள்ளார்.
இருப்பினும், ரோட்டா உடனடியாகப் பதவி விலகவேண்டும் என பலதரப்பிலும் வலுவான கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
திங்கள் கிழமையன்று,பிரதமர் ட்ரூடோ செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாடாளுமன்றத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.