அரசியலமைப்பை மீறியிருப்பின் சட்ட நடவடிக்கை எடுங்கள் ; மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு
இலங்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தமை அரசியலமைப்பை மீறும் செயல்பாடு என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். அவ்வாறு மத்திய வங்கியோ அல்லது அப்போதைய அரசாங்கத் தலைவர்களோ அரச அதிகாரிகளோ அரசியலமைப்பை மீறியிருந்தால் அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
எந்த ஒரு விடயத்தையும் வன்முறைகளினால் தீர்க்க முடியாது. மாறாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக சில மக்கள் பிரதிநிதிகள் வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டனர். எனவே, பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது மக்கள் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார ஊடகவியலாளர் ஷ்யாம் நுவன் கனேவத்த எழுதிய பொருளாதாரக் கொலை என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (25) கொழும்பு பண்டநாயக்க ஞாபகப்படுத்த சர்வதேச மாநாடு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.
நிகழ்வில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
‘’ 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையை வங்குரோத்து நாடாக அதாவது சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடாக பிரகடனப்படுத்தியமையை அரசியலமைப்பு மீறும் செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த விடயத்தில் எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் என யாராவது இந்த விடயத்தில் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். எமது மத்திய வங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். திறைசேரி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் நம்புகிறேன் ‘’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.