கருணாநிதியை பின்பற்றுவாரா ஸ்டாலின் ?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து நேற்று முடிவுகள் வெளியான நிலையில், 10 வருடத்திற்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி மூலம் தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தங்கள் குரல்களை ஓங்கி ஒலிக்க செய்ய காத்திருக்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் என்று மட்டுமே இருந்து வந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை தற்போதைய தேர்தல் மூலம் மாறியுள்ளது. 13 கட்சி பிரதிநிதிகள் சட்டமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.
தமிழக சட்டமன்றம் என்று சொன்னாலே திமுக, அதிமுக என்றுதான் இருக்கும். ஆனால் தற்போது இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி போட்ட சில மாற்றுக்கட்சிகள் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது குரலை பதிவு செய்ய உள்ளனர்.
திமுக அதிமுக அல்லாது காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மமக, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாமக, புரட்சி பாரதம் என மாற்று சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த முறை சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.
இந்த முறை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதுமையை எதிர்கொள்ள உள்ளது. பல்வேறு கட்சி பிரதிநிதிகள் முன் வைக்க உள்ள கோரிக்கைகள், சிந்தனைகள், புகார்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள திமுக தயாராக இருக்க வேண்டும்.
கருணாநிதி, காமராஜர் காலத்தில் பல்வேறு மாற்றுகட்சியினர் சட்டப்பேரவைக்கு நுழைந்த போதிலும் அவர்களுக்கென்று தனி மரியாதை கொடுத்திருந்தனர். அந்த மரியாதையை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.