தமிழகத்தில் மலர்ந்த தாமரை – எல் முருகன் பெருமிதம்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை பா.ஜ.க அரசியல் கட்சி மட்டுமல்ல மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்பும் ஆகும். நான் மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற போது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். அது நிறைவேறி இருக்கிறது. 1996ல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் பிறகு 2001ல் நான்கு சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற்றிருக்கிறது.
மூத்த தலைவர் திரு.எம்.ஆர்.காந்தி, பா.ஜ.க அகில பாரத மகளிரணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் திரு. நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் திருமதி. டாக்டர். சி.சரஸ்வதி, ஆகியோர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரங்கள் மேற்கொண்ட பாரதபிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், அகில பாரத தலைவர் திரு. ஜே.பி.நட்டா அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களுக்கும் மத்திய அமைச்சர்கள் திருமதி. நிர்மலா சீதாராமன், திரு.ராஜ்நாத்சிங், திருமதி.ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலைவர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.