அதிகாரப் பரவலாக்கலைவிட மாகாணசபைத் தேர்தலே முக்கியம் : ஜி.எல். பீரிஸ்
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாணசபைகளுக்கு ழககள் பிரதிநிதிகள் நியமிக்கப்படும்வரை ஆளுநர்களுக்கு ஆலோசனைகளை வழங்க, ஆலோசனைசபையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
ஆளுநர்களுக்கு அறிவுரை வழங்க ஆலோசனை சபையை நிறுவுவதைவிட, மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை முதலில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர்கூட, ஒன்பது மாகாணங்களுக்கும் இன்று இல்லை.
மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
எனவே, மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்கள் ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் முன்கூட்டியே நடத்த மாட்டார்கள். எனினும் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.
இன்னும் 365 நாட்களில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அத்தோடு, தேர்தலை பிற்போடும் மக்கள் ஆணைக்கூட இந்த அரசாங்கத்திற்கு கிடையாது.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேச முன்னர் மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.