தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் சட்டத்திருத்தம் - அதிபர் ரணில் திட்டவட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
13-வது சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார். அவர் கூறுகையில், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைத்து மாகாண சபைகளின் செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்.
மாகாண சபையின் எதிர்கால பங்கு குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியும் 13-வது சட்டத்திருத்தத்தை எதிர்க்கவில்லை. 13-வது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கான வழிகளை ஆழமாக ஆய்வு செய்ய அவர்களை அழைக்கிறேன். நாடாளுமன்றம் இறுதி முடிவெடுக்கும் வகையில் அவர்களின் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.