நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக டுவிட்டருக்கு ரூ.2.89 கோடி அபராதம்
தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்க கோரி அந்நிறுவனத்துக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முழுமையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தகவல்களை முழுமையாக தருவதில் தாமதம் ஏற்படுத்தியது, நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடி அபராதமாக விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.