சிறையில் கொசுக்கடியில் அவதிப்படும் இம்ரான்கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.
புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தோஷகானா வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருக்கும் இம்ரான்கானை சந்திக்க அவருடைய வக்கீல்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரது முதன்மை வக்கீல் நயீம் ஹைதர் பன்ஜோதா அவரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பன்ஜோதா கலந்து கொண்டு பேசினார்.
சிறையில் இம்ரான்கானுக்கு 'சி' வகுப்பு என்னும் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமரை பயங்கரவாதிகளை நடத்துவது போல் நடத்துகிறார்கள். திறந்த கழிப்பிட வசதி கொண்ட அறையில் காற்று வசதி, வெளிச்சம் புகாத வண்ணம் அவரை அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.
பகலில் ஈக்களாலும், இரவில் கொசுக்கடியினாலும் இம்ரான்கான் அவதிப்படுகிறார். என்னை இங்கிருந்து அழைத்து செல்லுங்கள். சிறையில் ஒருநொடி கூட இருக்க விரும்பவில்லை என தெரிவித்ததாக அவர் கூறினார். இதனால் அட்டாக் சிறையில் இருந்து அடிலா சிறைக்கு இம்ரான்கானை மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.