தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேச எந்த உரிமையும் இல்லை - செஹான் சேமசிங்க
கடந்த கால ஆட்சியில் நடந்ததை விடுத்து தற்போதைய ஆட்சியில் ஏதாவது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் அது தொடர்பில் கவனம் செலுத்த நாம் தயார்.
மாறாக பொறுப்பற்று, சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது தப்பியோடிய தரப்பினர் தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
சமிந்த விஜேசிறி எம் பி தமது கேள்வியின் போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியானது எந்த அமைச்சின் கீழ் இயங்கியது என்றும் அந்த சந்தர்ப்பத்தில் அந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் மற்றும் செயலாளரின் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அது தொடர்பில் தொடர்ந்தும் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், சபாநாயகரினால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்கு இணங்க நாம் சபையில் செயற்படுவதற்குத் தயார். ஆனால் பிணைமுறி மோசடி நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற போது அதனைப் பாதுகாத்து, தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சபையில் அது தொடர்பில் தெளிவில்லாத கேள்விகள் எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த சம்பவம் இடம்பெற்ற போது அதற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் யார் என அவர் கேள்வி கேட்டுள்ளார். அதனை அவர் மறந்துவிட்டாரா என நான் கேட்க விரும்புகின்றேன். அத்துடன் கடந்த கால ஆட்சியில் நடந்ததை விடுத்து தற்போதைய ஆட்சியில் ஏதாவது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் அது தொடர்பில் கவனம் செலுத்த நாம் தயார். மாறாக. பொறுப்பற்று, சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது தப்பியோடிய தரப்பினர் தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது
அவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்து அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தயார். திருடர்கள் தொடர்பில் பேசக்கூடிய உரிமை எதிர்க்கட்சியினருக்கு உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனினும் இந்தப் பிரச்சினை தற்போது எழுப்பப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டில் இருந்த நிலைமை மற்றும் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு பெரும் ஆதங்கம் உள்ளது என்பதை சபையில் குறிப்பிட்டாக வேண்டும் என்றார்.