ஒடிசா ரெயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இந்தியாவில் நடந்த ரெயில் விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் . என தெரிவித்துள்ளார்.