இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பரிசோதிக்க நடவடிக்கை
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்க அனுப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறிவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக பணிப்பாளரும் வைத்தியருமான ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்த சோதனைகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
நான்கு நாட்களுக்குள் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாவிட்டால், கையிருப்பு முட்டைகளை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் முட்டை விலைக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.