ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் 2024ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்போதிருந்தே பல மாகாணங்களில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரை பிரச்சினைகள் சூழத் தொடங்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இதேபோல ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவர் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேர்தலின்போது இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்க ஆபாச பட நடிகைக்கு ட்ரம்ப் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாயை மூட செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய டொனால்டு ட்ரம்ப், தன்னை 21ம் தேதி கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் இதற்கு எதிராக போராட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இன்று 21ம் தேதி ஆகியுள்ள நிலையில் ட்ரம்ப் கைது செய்யப்படுவாரா என்பது குறித்த பரபரப்பு எழுந்துள்ளது.