
மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 லட்சம் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 ஆயிரம் தனி வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை இன்று (13) கைச்சாத்திடப்பட்டது. இதற்கான நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது.