
கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் - இரா.சாணக்கியன்
முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்தே கோட்டாபய பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோன்று ரணில் விக்ரமசிங்க செயற்படுவாரானால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வட்டாரங்கள் மேற்கொள்ளவேண்டிய பிரசார செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஒரு தேர்தல் நடந்தால்தான் அது ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் தான் எமது அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடிய சூழல் ஏற்படும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு எமது கருத்துகளை பதிவுசெய்வதற்கு தயாராகவுள்ளோம். தேர்தலுக்காக மக்கள் வீதியிலிறங்கி போராடவும் தயாராகவுள்ளனர்.
முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்துதான் கோத்தபாய அவர்கள் பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல் நடாத்ததேவையில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம், சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லையென்றால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வரும்.