ரூ.1,000 மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்த ரூ.3.63 கோடி செலவிட்ட அமெரிக்கா
அமெரிக்காவில் பருவகால அறிவியல் பற்றி பரிசோதனை மேற்கொள்வதற்காக அந்நாட்டின் எரிசக்தி துறை மற்றும் பிற குழுக்களுடன் இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகள் அறிவியல் பலூன்களை வானில் பறக்க விடுகின்றன. அமெரிக்காவில் வடக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஹாபி குரூப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அது பிகோ பலூன்களை பயன்படுத்தி வருகிறது. இந்த பிகோ பலூன் என்பது, வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம் அல்லது காற்றலைகள் பற்றி அளவிடுவதற்கான கண்காணிப்பு கருவிகளை உள்ளடக்கி இருக்கும். இந்த சூழலில், கடந்த வாரத்தில் சீன உளவு பலூன் விவகாரம் பரபரப்புடன் பேசப்பட்டது. எனினும், அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது என சீனா எடுத்து கூறியது. எனினும், இதனை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறி வருகிறது. தொடர்ந்து அதனை சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்து வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் வாஷிங்டன் சுட்டு வீழ்த்தியது.
உலகம் முழுவதும் 5 கண்டங்கள் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை சுமத்தியது. அமெரிக்காவின் இந்த செயல் சீனாவுடனான உறவை மோசம் ஆக்கியுள்ளது என்றே சீனா பதிலாக தெரிவித்தது. இந்நிலையில், கனடாவின் யுகோன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த பிகோ பலூன் ஒன்றை அமெரிக்க அரசின் விமான படையை சேர்ந்த எப்-22 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் ஹாபி குரூப் அமைப்பு, பருவகாலம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக பிகோ பலூன்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், அப்படி பறக்க விடப்பட்ட அதன் பலூன்களில் ஒன்று அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 11-ம் தேதி காணாமல் போயுள்ளது என கூறியுள்ளது. இந்த பலூனையே அமெரிக்க ஏவுகணை சுட்டு வீழ்த்தியுள்ளது என கூறப்படுகிறது. எனினும், இந்த இரு நிகழ்வுகளையும் அந்த அமைப்பு இணைத்து கூறாவிடினும், பலூன் சென்ற திசையை வைத்து பார்க்கும்போது, அதற்கான சாத்தியம் உள்ளது என கூறப்படுகிறது.
அந்த குழுவிற்கான இணையதளத்தில் வெளியான செய்தியில், கே.என்.ஒய்.ஓ. என்ற பலூன் ஆனது அலாஸ்காவில் ஹேக்மீஸ்டர் தீவு அருகே 11 ஆயிரத்து 560 மீட்டர் உயரத்தில் கடைசியாக பறந்து சென்றது என தெரிவிக்கின்றது. எனினும், சுட்டு வீழ்த்தப்பட்ட அதன் பாகங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அந்த குழு தெரிவித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி கனடாவின் யுகோன் வான்பரப்பில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க அதிபர் பைடன் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதன் அடிப்படையில், அது அமெரிக்க விமான படையால் வீழ்த்தப்பட்டது. இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, அந்த மர்ம பொருள் ஒரு ராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று தெரியவில்லை என கூறியது. ஆனால், அதன் பறந்து செல்லும் பாதை மற்றும் கண்காணிப்பு பகுதியின் வழியே சென்றது, அதன் திசை ஆகியன மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடும் என எண்ணப்படுகிறது என தெரிவித்தது. இவற்றை வைத்து பார்க்கும்போது, சீன உளவு பலூனை வீழ்த்துகிறோம் என கூறி, அமெரிக்க அரசு ரூ.1,000 மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்துவதற்காக ரூ.3 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 54 மதிப்புடைய ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது.