சேலம் "மாடர்ன் தியேட்டர்" முன்பு செல்பி எடுத்து கொண்ட முதல் அமைச்சர்
சேலம் கோரிமேட்டில் அமைந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட 4 முன்னாள் முதல்-அமைச்சர்கள் பணியாற்றிய இடம் ஆகும். 1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு நிறுவனத்தில் முழுப் படத்தையும் தயாரிக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் இருந்தன.
இந்தநிலையில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய மு.க.ஸ்டாலின், அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
சேலம் சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் வாசலில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், கள ஆய்வின் போது வழியில் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை பார்த்ததும் வாகனத்தை நிறுத்த சொன்னேன். டி.ஆர். சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால், திராவிட இயக்க கலைஞர்களின் தொட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்-ன் நுழைவு வாயிலை படம் பிடித்தேன்.
9 மொழிகளில் 118 படங்களைத்தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்...! என பதிவிட்டுள்ளார்.