எலி செய்த வேலை - மாயமான 130 சவரன் நகை
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் ஐடி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சிறுசேரியில் உள்ள மற்றொரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வீடுபுகுந்து பீரோவில் தாங்கள் வைத்திருந்த 130 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் கைரேகை நிபுணர்களோடு அவர்களது வீட்டிற்கு சென்று போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 130 சவரன் நகைகளும் அப்படியே இருந்துள்ளது. இது போலீஸாருக்கே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தம்பதியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் நள்ளிரவு 12.30 மணியளவில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாகவும், பீரோ திறந்து கிடந்ததால் உள்ளே பார்த்தபோது நகை திருட்டு போயிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு எலி தொல்லை அதிகமுள்ள நிலையில் எலிகள் பாத்திரத்தை உருட்டியிருப்பதை கள்வர்கள் புகுந்து விட்டதாக தம்பதியினர் தவறாக புரிந்து கொண்டு நகை இருப்பதை சரியாக கவனிக்காமல் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீஸார் பொருட்கள் காணவில்லை என்றால் நிதானமாக தேடுங்கள் என கூறியுள்ளனர்.