உடல்நிலை சரியில்லாத தந்தையை தள்ளுவண்டியில் வைத்து 3 கி.மீ வரை அரசு மருத்துவமனைக்கு தள்ளி வந்த ஏழை சிறுவன்
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள சிங்ராலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உடல் நலன் குன்றிய தனது தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒரு தள்ளுவண்டியில் வைத்து 3 கி.மீ தள்ளிக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் சிங்கராலி மாவட்டத்தில் உள்ள பலியாரி நகரில் நடைபெற்றுள்ளது. சிறுவன் தள்ளுவண்டியில் வைத்து அவரது தந்தையைத் தள்ளிச்செல்வதையும், அவனுடன் அவனது தாய் அவ்வண்டியைத் தொடர்வதையும் அவ்வழியே சென்ற ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆம்புலன்ஸ்க்காக சிறுவன் குடும்பத்தினர் அழைத்ததாகவும் பல மணிநேரம் காத்திருந்த பின்னரும் வரவில்லை என்று சிறுவனின் குடும்பத்தார் குறிப்பிட்டனர். இறுதியில் தாங்களாகவே தள்ளுவண்டியில் தந்தையை அழைத்து செல்ல முடிவெடுத்தனர். இந்த வீடியோ வெளியானதை அடுத்து சிங்ராலியின் கூடுதல் கலெக்டர் பர்மன் கூறுகையில், "ஆம்புலன்ஸ்கள் இல்லாத காரணத்தைக் கண்டறிய தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது "என்றார்.