உலக அரசு உச்சி மாநாடு துபாயில் நாளை தொடங்குகிறது
20 நாடுகளின் அதிபர்கள்-150 நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கும் உலக அரசு உச்சி மாநாடு துபாயில் நாளை தொடங்குகிறது.
துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள மதினத் ஜுமைரா நட்சத்திர ஓட்டலில் உலக அரசு உச்சி மாநாடு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு 15-ம் தேதி வரை நடக்கிறது. அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திட்டத்தின் அடிப்படையில் மாநாடு நடத்தப்படுகிறது. 'எதிர்கால அரசை வடிவமைப்போம்' என்ற கருப்பொருளில் நடக்கும் மாநாட்டில் 20 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி, செனகல் நாட்டின் அதிபர் மக்கி சால், பராகுவே நாட்டின் அதிபர் மரியோ அப்தோ பெனிடெஸ், அசர்பைசான் நாட்டின் அதிபர் இல்கம் அலியெவ், மொரிசியஸ் நாட்டின் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் உள்ளிட்ட 20 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.
220-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தலைவர்கள் உரைகளை வழங்க இருப்பதால் மாநாட்டில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கிய இந்த மாநாட்டின் விளைவாக 'உலக எதிர்கால அருங்காட்சியகம்' செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.