பழனி கோயில் கருவறையில் அமைச்சர் சேகர்பாபு நுழைந்தாரா?
பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார் என்றும் இதனால், மீண்டும் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
"அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார் வானதி.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று, தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடந்து முடிந்துள்ளது. அதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.
அதற்கு முந்தைய நாள் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அமைச்சர், அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயில் கருவறைக்குள் சென்றதாக கூறி சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இதையடுத்து, கோயிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளது. இதனால் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அர்ச்சகர் என கூறப்படும் ஒருவர் பேசும் ஆடியோ செய்தி ஒன்றும் பரவியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர், அதிகாரிகள் கோயில் கருவறையில் நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ள வானதி, பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.