கல்விப் புரட்சியை நடைமுறைப்படுத்த சஜித் சூளுரை
தற்போது எமது நாட்டின் கல்வி முறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கல்வி முறையால் உலகை வெல்ல முடியாது எனவும், புதிய உலகை நோக்கிய பயணத்தில் உலகை வெற்றி கொள்ள வேண்டுமானால் டிஜிட்டல், கணினி மற்றும் ஆங்கில மொழிக் கல்விப் புரட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகளின் ஆங்கில மொழிப் புலமையை உலகில் மிக உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழியை சரளமாகப் பயன்படுத்தும் திறனை விரிவுபடுத்த வேண்டும் எனக் கூறும்போது கிணற்றுத் தவளை எண்ணப்போக்கில் உள்ள சிலர் சிரிக்கிறார்கள் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மரபான கல்வி முறையை ஒழித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும், சர்வதேச தொழிலாளர் சந்தையை மையமாகக் கொண்ட கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்று எனக் கூறி இவ்வாறான கல்வி முறையை எதிர்ப்பது எமது நாட்டை மேலும் வங்குரோத்து செய்வதாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில், கணினி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக் கல்வியை இந்நாட்டில் யதார்த்தமாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.